ஆதரவு ஏன்? – வேளாண் மசோதா விவகாரத்தில் முதலமைச்சர் விரிவான விளக்கம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

➤ ஒப்பந்த சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இச்சட்டத்தில், விவசாயிகளைக் கட்டாயப்படுத்தவோ, அல்லது பாதிக்கும் வகையிலோ பிரிவு எதுவும் இல்லை.

➤ அரசியல் காரணங்களுக்காக தற்போது இந்த ஒப்பந்த சாகுபடிச் சட்டத்தை எதிர்க்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இதுபோன்ற சட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தியபோது அவர் எதிர்க்கவில்லை.

➤ முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட விலை கிடைக்கும் என்ற நிலை இருப்பதால், விலைவீழ்ச்சி போன்ற பாதிப்புகளிலிருந்து விவசாயிகள் காப்பாற்றப்படுவர். கொள்முதலாளர்களும் குறிப்பிட்ட தரம் மற்றும் அளவிலான வேளாண் விளைபொருள்களைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

➤ அறிவிக்கப்படும் எந்த ‘வணிகப்பகுதி’யிலும் அனுமதி தரப்படுவதால், விற்பனை செய்ய விவசாயிகளுக்கு முழு சுதந்திரம்.

➤ பஞ்சாப் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். அதே நிலை தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது.

➤ மின்னணு வர்த்தகத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளதால் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

➤ ஸ்டாலின் கூறுவதுபோல விவசாயிகளுக்கு நிரந்தர கணக்கு எண் (PAN) எண் தேவையில்லை; வணிகர்களுக்கு மட்டும் இருந்தால் போதும்.

➤ புதுச்சட்டம் எந்த வகையிலும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் செயல்பாடுகளை பாதிக்காது.

➤ கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பதுக்க வழிவகுக்கும் என்பதில் துளியும் உண்மையில்லை.

➤ உழவர்-நுகர்வோர் சந்தைகளுக்கு ஒப்புதல் இருக்கிறது; எனவே, தமிழ்நாட்டின் உழவர் சந்தைக்கு இது எதிரானது அல்ல.

➤ பொதுவிநியோகக் கொள்முதல் தொடரும் என்பதால் தமிழக விவசாயிகளுக்கு கொள்முதல் பாதிப்பு எதுவுமில்லை.

➤ புதுச்சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைக்கும் என்பதை உணர்ந்தே இவற்றை நான் ஆதரிக்கிறேன்.

Exit mobile version