திமுகவில் யாரை பொதுச்செயலாளராக நியமித்தாலும் பூகம்பம் வெடிக்கும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திமுகவில் யாரை பொதுச்செயலாளராக நியமித்தாலும் அக்கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என, வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.   மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சென்னை வடபழனியில்  நடைபெற்றது. இதில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தியாகராயநகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர் உதயகுமார் பேசுகையில், 2011 ஆம் ஆண்டில், திமுக ஆட்சியை விட்டு செல்லும்போது, அரசுக்கு,ஒரு லட்சம் கோடி கடன் இருந்ததாக குற்றம்சாட்டினார்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டப்பேரவையில் அறிவித்தபோது, திமுக ஏன் வெளிநடப்பு செய்தது என கேள்வி எழுப்பிய அவர், குடியுரிமை திருத்தச் சட்ட  விவகாரத்தில் திமுக மக்களை திசை திருப்புவதாகவும், சிறுபான்மையினரை, திமுகவை விட அதிமுக பன்மடங்கு பாதுகாக்கும் என்றும் கூறினார். பேராசிரியர் க.அன்பழகன் மறைவையடுத்து, திமுகவில் யாரை பொதுச்செயலாளராக நியமித்தாலும் அக்கட்சிக்குள் பூகம்பம் வெடிக்கும் என்றும் அமைச்சர் உதயகுமார் கருத்து தெரிவித்தார்.

Exit mobile version