அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரும், “கால்பந்து கடவுள்” என அழைக்கப்பட்டவருமான டீகோ மரடோனாவின் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார், டீகோ அர்மேண்டோ மரடோனா. அர்ஜென்டினா அணிக்காக 91 ஆட்டங்களில் 34 கோல்களை அடித்த மரடோனா, 1977 ஆம் ஆண்டு ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டியில் தனது 16வது வயதில் சர்வதேச போட்டியில் தடம் பதித்தார்.
18 வது வயதில் அர்ஜென்டினாவிற்காக உலக இளையோர் சேம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி, சோவித் யூனியன் அணிக்கு எதிராக வெற்றி பெற காரணமானார். 1979-ல் ஹாம்டென் பார்க்கில் நடைபெற்ற போட்டியில், ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக விளையாடி தனது முதல் முதுநிலை சர்வதேச கோலை பதிவு செய்தார், மரடோனா.
1986 ஆம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி, மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற, முக்கிய பங்கு வகித்தவர் மரடோனா. நான்கு உலக கோப்பை போட்டிகளில் பங்கேற்ற அவர், 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரானார். அவரது மறைவுக்கு முன்னர் வரை அர்ஜென்டினா அணியின் மேலாளராக இருந்தார்.
எப்போதும் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று கருதப்பட்ட மரடோனா, அவ்வப்போது சர்ச்சைகளிலும் தோன்றினார். 1986ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில், மரடோனா அடித்த பந்து இங்கிலாந்து கோல் கீப்பர் பீட்டர் ஷில்டனைத் தாண்டி வலைக்குள் விழுந்தது. அது கோல் என்று அறிவிக்கப்பட்டதால், அர்ஜென்டினா வெற்றி பெற்றது. ஆனால், மரடோனாவின் கையில் பந்து பட்டு வலைக்குள் விழுந்தது என பெரும் சர்ச்சை எழுந்தது. சற்றும் பதற்றமடையாத மரடோனா, ”பந்து எனது கையில் படவில்லை, கடவுளின் கைதான் பந்தைத் தொட்டு கோலாக்கியது” என ஸ்டைலாக சமாளித்தது பிரபலமானது.
1997 ஆம் ஆண்டில் தனது 37 வது பிறந்தநாளின்போது விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார் மரடோனா.கடந்த இரு வாரங்களுக்கு முன் மூளையில் அறுவை செய்யப்பட்ட பின்னர், வீட்டில் சிகிச்சை பெற்று வந்த மரடோனா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மரடோனாவின் திடீர் மறைவு கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.