தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே ரெம்டெசிவிர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ரெட்மிசிவிர் மருந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பற்றாக்குறையை பயன்படுத்திக்கொண்ட சிலர், மனிதாபிமானமற்ற முறையில், கள்ளச்சந்தையில் மருந்தை விற்று அதில் லாபம் பார்க்கின்றனர். பல்வேறு பகுதிகளில் பதுக்கல் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனாவை குணப்படுத்துமா ரெம்டெசிவிர் ?
பெரும்பாலும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம், `ரெம்டெசிவிர் மருந்தை உடனே வாங்கிட்டு வாங்க’ என்று வலியுறுத்துகிறது மருத்துவமனை நிர்வாகம். இதனால், நீண்ட நேர வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்க வேண்டி உள்ளது. மருந்து கிடைக்காமல் பல இடங்களில் போராட்டம் நடந்ததையும் பார்த்திருக்கிறோம். ஏற்கெனவே கொரோனா தொற்று மரணங்கள் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் நிலையில், மக்களை இப்படி உளவியல் ரீதியாக தனியார் மருத்துவமனைகள் பாதிப்பது சரிதானா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் பல்வேறு ஆய்வுகள் ரெட்மிசிவிர் மருந்து கொரோனாவை குணப்படுத்தாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
7 இந்திய நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்தை உரிய அனுமதி பெற்று தயாரித்து வருகின்றன. மாதம் ஒன்றிற்கு 38.80 லட்சம் யூனிட் மருந்துகளை உற்பத்தி செய்தும் வருகின்றன. எப்படியிருந்தாலும் இன்று வரை ரெம்டெசிவிர் கொரோனாவை குணப்படுத்துவதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பது தான் உண்மை. மருத்துவ ரீதியாக எந்த வித நிருபணமும் இல்லாத நிலையில் தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவரை பிடித்து ஏன் தொங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது தெரியவில்லை.ஹெபடைடிஸ் சி நோயை குணப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டது தான் இந்த ரெம்டெசிவிர் மருந்து. தொடர்ந்து இது எபோலோ வைரஸூக்கு எதிராக போராடுகிறது என்பது பின்னர் கண்டறியப்பட்டது. இப்படியிருக்கும்போது, கொரோனாவால் ஏற்படும் மரணங்களை குறைக்க ரெம்டெசிவிர் உதவுகிறது என்று பரவலாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை மருத்துவ ஆராய்ச்சியாளர் சௌவுமியா சுவாமிநாதன் கூறுகையில், “கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கான வென்டிலேட்டர் தேவையை ரெம்டெசிவிர் மருந்து எந்த விதத்திலும் குறைக்கவில்லை என்பதை 5 கட்ட மருத்து பரிசோதனை முடிவில் தெளிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இறப்பு விகிதத்தை குறைக்கவும் இந்த மருந்து பயன்படுவதில்லை” என்று தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் பயன்படுத்துவது குறித்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளிலும் கூட இதற்கான முடிவுகள் எட்டப்படவில்லை.
கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து அறிய உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து மிகப்பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பபட்டு அதற்கான முடிவுகளுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
Discussion about this post