அண்ணாவிடம் இருந்து கருணாநிதி கையாடல் செய்த சொல்லாடல்களில் ஒன்று ‘உடன்பிறப்பே…’
அன்புத் தம்பி என்று அனைவரையும் அண்ணா அழைத்துவந்த நிலையில், அண்ணாவின் தம்பிகளில் கடைக்குட்டியாக இருந்தும், அரசியல் நகர்வுகளில் ஆட்களை வீழ்த்தி மேலே வந்த கருணாநிதி கண்டுபிடித்த திருட்டுத் திரவியம் அந்தச் சொல்.
நாளுக்குநாள் நாமும் மாறுவோம் , நாளும் மாறும் ஆனால் கலைஞரின் உயிரினும் மேலான என்ற சொல் மட்டும் மாறவில்லை. காரணம் உணர்வுள்ள சொல்லின் பொதுநிலைதான் உருமாறுமே ஒழிய வெறும் சொல் தன்னிச்சையான தனி மாற்றத்திற்கு தகுதியற்றது.
ஆனால் அந்தச் சொல்லையும் இப்போது மாற்ற வேண்டிய நிலைக்கு திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலினைத் தள்ளிவைத்து தனக்குத்தானே சிரித்துக்கொள்கிறது காலம்..
உடன் பிறந்த அண்ணன்களை முதலில் அரசியலில் ஒதுக்கி, பின்னர் வீட்டை விட்டு ஒதுக்கி, இப்போது தந்தையின் சிலை திறப்பு விழாவுக்கே வராமல் ஒதுக்கும் ஸ்டாலின் இனி உடன்பிறப்பே என்று அழைத்தால் யார்தான் நம்புவார்கள்? ஆம் உடன்பிறப்பு என்கிற சொல் தன் பொதுநிலை இழந்தது கருணாநிதியிடம். இப்போது பொருளையே இழந்துள்ளது ஸ்டாலினிடம்.
தன் மகனை அரசியல் மேடைகளில் முன்னிறுத்தும் ஸ்டாலின் தன் உடன்பிறப்பை ஒதுக்குவதன் மூலம் வாரிசு அரசியல் என்ற பழியைத் துடைத்துவிட்டது போல காட்டிக் கொள்வது, அழுக்குக் கையால் வெள்ளை ஆடையை மடிப்பது போன்றது.
சினிமாவில் நடிக்கச் சென்று தோற்ற ஒருவர், செயல் தலைவர் பதவியில் செயலாற்றத் தெரியாமல் தேர்தலில் தோற்ற ஒருவர், இதோ இப்போது ஒரு மகனாகவும் சகோதரனாகவும் ஒரே நேரத்தில் தோற்று தானொரு மகத்தான தோல்வியாளர் என்பதைப் பறைசாற்றிக் கொள்கிறார்…
கருணாநிதி உடன்பிறப்பே என்றபோது ஆர்ப்பரித்துகொண்டு மகிழ்ச்சியாக இருந்தவர்கள், இப்போது “ஸ்டாலினின் உடன்பிறப்பே”வைப் பார்த்து அதிர்ச்சியாக சந்தேகிக்கிறார்கள்.
பொது எதிரி என்றொரு கொள்கையை முன்னிறுத்தி கூட்டம் கூட்ட முட்டிக்கொண்டிருக்கும் ஸ்டாலின் தன் அப்பாவிடமிருந்து கற்காமல் விட்டது அரசியல் பாண்டித்தியம் மட்டுமல்ல. சொந்த விருப்பு வெறுப்பு கடந்த அணுசரனையான அனுகுமுறையும்தான். வந்தவரை ஏற்பதில் அல்ல அனுசரனை. தன்னோடிருப்பவர்களை மகிழ்ச்சியாக தக்கவைத்துகொள்வதில் இருக்கிறது. உண்மையில் ஸ்டாலின் இதில் இன்னும் தேறவேண்டும்.
தனக்கான இடம் வேண்டும் என்கிற தேடல் இருக்கும் ஒருவன் தேட வேண்டுமே ஒழிய, இருந்த இடத்தில் எல்லாம் அமையுமென்பது மந்திரத்தில் மாங்காய் வருகிற கதை. உண்மையில் தன் குடும்பத்தையே சரிவர ஆளத் தெரியாத ஒருவருக்கு கட்சியை ஆளும் பொறுப்பும், நாடாளும் ஆசையும் கேடா எனக் கேட்கிறார்கள் சொந்தக் கட்சிக்காரர்கள்…
ஒரு தலைவன் என்பவன் முதலில் தன்மனத்து விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவனாக இருக்கும்போதுதான் அவன் தலைவன் என்கிற அடையாளத்திற்கு தகுதியுள்ளவனாகிறான். இங்கு காழ்ப்பு கடந்து சிந்திக்கவே தெரியாத தலைவராக உருவாகிறார் ஸ்டாலின். இதுஒருவகையில் ஆபத்தும் எதிர்கால சமூகத்திற்கான அச்சுறுத்தலும் தான்.
வேண்டுமானால் உடன்பிறப்பே என்பதற்கு பதிலாக இனிமேல் அன்பு மகன்களே என்று கூப்பிடலாம் ஸ்டாலின்… வயதுப் பொருத்தம் இல்லாவிட்டாலும் வார்த்தைப் பொருத்தமாவது மிஞ்சும்…
உடன் பிறப்பே என்று தொண்டர்களை அழைத்தவரின் முதல் பிறப்பே இல்லாமல் ஒரு விழா. உண்மையில் திமுக தொண்டர்கள் கண்கலங்குவது கருணாநிதி சிலையைப் பார்த்து அல்ல, திமுகவின் நிலையைப் பார்த்து.
உண்மையாகவே உனக்குள் தலைமைப்பண்பு இருந்திருந்தால் காலம் உன்னைத் தேர்ந்தெடுத்து கையில் செங்கோல் வழங்கும் என்பதே இந்த உலகம் சொல்லும் வரலாறு. இனிமேலாவது இந்தப் படிப்பினையை ஸ்டாலினுக்கு உலகம் வழங்கட்டும்
மொத்தத்தில் பெரியார் புள்ளிவைக்க , அண்ணா சொல்லி வைக்க, உடன்பிறப்பே என்று வாய்வழிச் சொல்லியேனும் தொண்டர்களை கலைஞர் அள்ளிவைக்க சொந்த அண்ணனையே தள்ளிவைத்து கலைஞரின் திமுக சாம்ராஜ்யத்திற்கே கொள்ளிவைத்திருக்கிறார் ஸ்டாலின்.
Discussion about this post