மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆன நிலையில் தனது முழுக் கொள்ளளவை 43-வது முறையாக எட்டியுள்ளது மேட்டூர் அணை. தமிழக நீர்ப்பாசனத்தில் மேட்டூர் அணையின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து பார்ப்போம்…
காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையே மேட்டூர் அணை ஆகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் இது அழைக்கப்படுகிறது.
மேட்டூர் அணை 1925-ல் கட்டத் தொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட போது, அது ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது. இன்றும் மேட்டூர் அணையே தமிழகத்தின் மிகப்பெரிய அணையாக உள்ளது.
மேட்டூர் அணையின் அதிகபட்ச உயரம் 214 அடிகள் ஆகும், அணையின் அதிகபட்ச அகலம் 171 அடிகள் ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடிகள் ஆகும். மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணாராஜசாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. மேட்டூர் அணை மூலம் தமிழ்நாட்டில் 20 மாவட்ட மக்கள் பலன் பெறுகின்றனrர். காவிரி டெல்டா மாவட்டங்களின் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 12 மாவட்டங்களின் மக்கள் மேட்டூர் அணையின் நீரையே குடிநீர் ஆதாரங்களுக்காக சார்ந்து உள்ளனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேட்டூர் அணையானது கட்டப்பட்டதில் இருந்து தூர்வாரப்படாமல் இருந்ததால், கடந்த 2016ல் இங்கு 20% அளவுக்கு சகதி படிந்திருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இதனால் அணை கட்டப்பட்ட 83 ஆண்டுகளில் முதன்முறையாகக் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் இங்கு தூர்வாரும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து வரலாற்றில் தடம் பதித்தார். கடந்த 2018 ஜூலையில் மேட்டூர் அணையை பாசனத்திற்காக திறந்தபோது ‘மேட்டூர் அணையைத் திறந்த முதல் தமிழக முதல்வர்’ – என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.