சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ஆண்டு வருமானம் என்ன?: உயர்நீதிமன்றம்

பத்திரிகையாளர் மன்றத்தின் ஆண்டு வருமான விவரத்தை சமர்ப்பிக்க அதன் நிர்வாகிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் மீது தவறான அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும், இது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டுமெனவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பியதோடு, பத்திரிகையாளர் என்ற பெயரை மோசடிப் பேர்வழிகள் கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும், பத்திரிகையாளர் மன்றங்களை போலி நிருபர்களே நிர்வகித்து வருவதாகவும் வேதனைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் ஆஸ்திரேலியாவில் இருந்து இயக்கப்படுகிறதா? எனவும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ஆண்டு வருமானம் என்ன? அதன் கணக்குகள் முறையாக உள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், போலி பத்திரிகையாளர்களை களை எடுக்க ஏதுவாக, இந்த வழக்கில் ஏற்கனவே எழுப்பிய கேள்விகளுக்கு பிப்ரவரி 24ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 24ம் தேதிக்கே ஒத்திவைத்தனர்.

Exit mobile version