மனிதர்களாகிய நமக்கு ஒரு நாளில் ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை சராசரியாக தூக்கம் என்பது தேவைப்படுகிறது. அப்படி தூங்கினாலும் அடுத்தநாள் அலுவலகத்திலோ, பள்ளியிலோ, கல்லூரியிலோ மதிய உணவு எடுத்துக்கொண்ட பின் தூக்கமானது வருகிறது அல்லது மூளை சோர்வடைகிறது. இதனை சரிபடுத்தவே உலக நாடுகள் ‘பவர் நேப்’ என்ற முறையை கொண்டுவந்துள்ளனர்.
’பவர் நேப்’ என்றால் என்ன?
’நேப்’ என்ற ஆங்கில சொல்லுக்கு சிறிய அல்லது குட்டி உறக்கம் என்று பொருள். கிட்டத்தட்ட பத்து நிமிடத்தில் இருந்து இருபது நிமிடம் வரை இந்த உறக்கத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். இது சில முறை அரை மணி நேரமும், ஏன் ஒன்றரை மணி நேரம் வரை கூட நீளலாம். ஆனால் ஒன்றரை மணி நேரம் வரை நீண்டால் அதனை முழுத் தூக்கமாகவே சிலர் கருதுகின்றனர்.
‘பவர் நேப்’பின் நன்மைகள் என்ன?
நாம் பவர் நேப் எடுத்துக்கொள்வதன் மூலம் நம் மூளையானது புத்துணர்ச்சிக் கொள்கிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சோர்வு நீங்குவதுடன், ஞாபகத் திறனும் மேம்படும். மேலும் மதியத்திற்கு பிறகு உற்சாகமாக இயங்க இந்த பவர் நேப் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.
மதிய சாப்பாட்டிற்கு பிறகு உறக்கம் வர காரணம் :
மதிய உணவிற்கு பிறகு நம்மவர்களுக்கு தூக்கத்திற்கான அறிகுறியானது அதிக அளவு ஏற்படுகிறது. அதனை சமாளிக்க நாம் முகத்தைக் கழுவுவதும் தேநீர் அருந்துவதும் போன்ற செயல்களை செய்கிறோம். நம்மால் அப்படியும் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனை நாம் ‘ஃபுட் கோமோ’ என்று சொல்கிறார்கள். சாப்பிட்ட பிறகு செரிமானம் ஏற்படுவதற்கான இரத்தமானது வயிற்றை நோக்கி செல்லும். அதில் சில துளிகள் சிறு மூளைக்கு செல்கிறது. இதனால் மூளையானது தூக்கத்தை நாடுகிறது. இதன் விளைவாக நமக்கு மதியம் தூக்க கலக்கம் ஏற்படுகிறது.
உலக நிறுவனங்களில் ‘பவர் நேப்’
கூகுள் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், அவர்களின் பணியாளர்களுக்கு என்று ஒரு பவர் நேப் ஸ்லீப்பிங் சேர் ஒன்றினை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதே போல பேஸ்புக் நிறுவனம் போன்ற உலக நிறுவனங்கள் அனைத்தும் இந்த பவர் நேப் ஸ்லீப்பிங் சேர் முறையினை தங்களது ஊழியர்களுக்காக உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். இந்த நாற்காலியின் சந்தை மதிப்பானது 3.6 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த ஸ்லீப்பிங் சேர் உறங்குபவர்களுக்கு ஒரு லாவகமான தன்மையக் கொடுக்கிறது. உறங்க செல்பவர்களுக்கு ஏற்ற இசையையும், அவர்களுக்கான தூங்கும் நேரத்தையும் வரையறை செய்து வைக்கிறது. தூங்குவதற்கான ஒலி மற்றும் ஒளி இரண்டையும் சரியான விகிதாச்சாரத்தில் கொடுக்கிறது. தற்போது இந்திய சந்தைகளிலும் இந்த பவர் நேப் சேரானது பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.