காஷ்மீர் இஸ்லாமியர்கள் குறித்து ஐ.நா-வில் பேசும் பாகிஸ்தான், சீனாவில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள் குறித்து ஏன் வாய்திறப்பதே இல்லை என்று அமெரிக்க அரசு ஐ.நா.சபையில் கேள்வி எழுப்பியுள்ளது… சீனாவில் இஸ்லாமியர்களுக்கு என்னதான் நடக்கின்றது?
சீனாவின் அருகே ஜின்ஜியாங் என்று ஒரு சுதந்திர நாடு இருந்தது. அங்கு 95% அளவுக்கு வீகர் அல்லது உய்குர் இனத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்த நாட்டை, கடந்த 1949ல் ஆக்கிரமித்த சீனா, அதனை தனது மாகாணங்களில் ஒன்றாக மாற்றியது. ஜின்ஜியாங் மாகாணம் இப்போது சீனாவின் மிகப் பெரிய எல்லையைக் கொண்ட மாகாணமாக உள்ளது.
வீகர் இஸ்லாமியர்களின் மத அடையாளத்தை அழிக்க, சீன அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தொழில் பயிற்சிக் கூடங்கள் எனப்படும் அடக்குமுறைகள் நிறைந்த பகுதிகளில், இஸ்லாமிய மதம் மற்றும் மொழியைப் பற்றி பேசும், வீகர் இனத்தைச் சேர்ந்த வயது வந்தவர்களை சீன அரசு அடைக்கிறது.
இங்கு அடைத்து வைக்கப்பட்டவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளையும், அரசால் கடத்தப்பட்ட குழந்தைகளையும், உண்டு உறைவிடப் பள்ளிகள் – என்று பெயரிடப்பட்ட கட்டுப்பாடுகள் நிறைந்த இடங்களில் சீன அரசு அடைத்து வைக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல், வீகர் இன சிறார்களை இத்தகைய பள்ளிகளில் அடைப்பது அதிகரித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச ஊடகம் போன்றவற்றின் கண்காணிப்பினால்தான், சீனாவின் இந்த அழிவு வேலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. சர்வதேச ஆய்வுகள், சீனாவில் சுமார் 30 லட்சம் இஸ்லாமிய மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கின்றன. இப்படியாக சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆய்வுகளுக்காகவும், உடல் உறுப்புகளுக்காகவும் கொல்லப்படுவதாகவும் புகார்கள் உள்ளன. இஸ்லாமியர்களின் அரபி மொழிக்கும், இஸ்லாமிய சின்னங்களுக்கும், சீனா சமீபத்தில் தடையும் விதித்தது.
சீனாவின் இந்த இன அழிப்பு குறித்து, உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்து இருந்தாலும், பாகிஸ்தான் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஒரே ஆதரவாக சீனா உள்ளது என்பதுதான் இதன் பின்னுள்ள ஒரே காரணம் ஆகும்.