இன்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதலாம் ஆண்டு நினைவுநாள். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கூறும் பொய்கள் என்ன? மக்கள் அறிய வேண்டிய உண்மைகள் என்ன? ஏன் நடந்தது துப்பாக்கிச் சூடு? – பார்க்கலாம்.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டில் இருந்தே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகளும் சில மக்கள் விரோத அமைப்புகளும் ஒன்றாக இணைந்து, அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. இவை அரசின் செயல்பாடுகளை மக்களிடம் திரித்துக் கூறின.
உண்மையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை பெரிதும் மதித்தது. 2013ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுவாயு கசிந்த போது தமிழக அரசுதான் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. பின்னர் தமிழக அரசு ஸ்டெர்லைட்டைத் திறக்கத் தயாராக இல்லாததால், ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்ற உத்தரவைப் பெற்றே ஆலையை மீண்டும் திறக்க முடிந்தது. இப்படிப் பல உதாரணங்களைக் கூறலாம்.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலை ஏற்கனவே பெற்று இருந்த ‘தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய’த்தின் அனுமதி முடிவடைய, அதனை புதுப்பிக்க மாட்டோம் என ஏப்ரல் 9ஆம் தேதியே தமிழக அரசு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் பின்னர் மே 28ஆம் தேதி ஸ்டெர்லைட்டின் மின் இணைப்பையும் தண்ணீர் இணைப்பையும் தமிழக அரசு துண்டித்து, அதை ஒரு அரசாணையாகவும் வெளியிட்டது.
இப்படி தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்த போதும், மக்களிடம் அரசுக்கு எதிராக பொய் பிரசாரம் தொடர்ந்து செய்யப்பட்டது. தூத்துக்குடியில் உள்நோக்கம் கொண்ட சிலர் அரசுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
இந்த தேவையற்ற போராட்டங்கள் 100ஆம் நாளை நெருங்கியதால், எதிர்பாராத அசம்பாவிதங்களைத் தடுக்க மே 21ஆம் தேதி இரவு 10 மணி முதல், முதல் 23 ஆம் தேதி காலை 8 மணி வரை தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலையம் ஆகியவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஆட்சியரால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி போராட்டம் நடந்ததே அனைத்துப் பிரச்னைகளுக்கும் முதல் காரணமானது.
2018 மே 22 அன்று, ஆட்சியரின் உத்தரவை மீறி போராட்டம் தொடங்கியது, முதலில் அமைதியாகவே நடந்த போராட்டத்தில் மீண்டும் சமூக விரோதிகள் தங்கள் வேலையைக் காட்டினார்கள். அவர்கள் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டுவதன் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் திட்டமிட்டனர்.
சமூக விரோதிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள வாகனங்களுக்குத் தீ வைத்தனர். பின்னர் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள வாகனங்களுக்கும் தீ வைத்தனர், அவர்களில் சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே நுழையவும் முயற்சி செய்தனர்.
இந்நிலையில் சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவலர்கள் முதலில் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர், அது பலனளிக்காத நிலையில் பின்னர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இவையெல்லாம் பலன் தராத சூழலில்தான் தற்காப்புக்காக தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இது ஒரு விரும்பத்தகாத சம்பவம் என்பதையும், தவிர்க்க இயலாத சூழலில் இப்படி நடந்தது என்பதையும் பின்னர் முதல்வரே ஊடகங்களிடம் விளக்கினார். முதல்வரின் விளக்கத்திற்குப் பின்பும் கூட எதிர்கட்சியினரும் சில மக்கள் விரோத சக்திகளும் தொடர்ந்து அரசுக்கு எதிரான கருத்துகளையே கூறி வருகின்றன.
இதோ தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை சீல்வைத்து மூடி ஓராண்டு ஆகப்போகிறது, ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றங்களின் கதவுகளையும், தேசிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கதவுகளையும் தட்டியபோதும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் இன்றும் தொங்கும் பூட்டு ஒன்றே அரசின் உண்மை நிலைப்பாட்டை உலகம் அறியப் போதுமானது.
ஏமாற்று வார்த்தைகளுக்கு மக்கள் இலக்கு ஆகாமல், உண்மையை உணர வேண்டிய தருணம் இது.
Discussion about this post