மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெண் குழந்தைகளுக்காக கொண்டு வந்த திட்டங்கள் என்ன ?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தாள் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும் அளவிற்கு, பெண் குழந்தைகளுக்குப் பயன்படும் வகையில் அவர் கொண்டுவந்த முக்கியத் திட்டங்கள் என்னென்ன?

 

1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் 50,000 ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25,000 வைப்புத் ரூபாயும் இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தால் கிடைக்கும் தொகை, ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளுக்கு உதவியது, லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றனர்.

2. தொட்டில் குழந்தை திட்டம்

பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில், 1992-ம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்படது, இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து உள்ளது.

3. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம்

உடல் எடைக்கும் உடல் நலனுக்கும் இடையே உள்ள தொடர்பை மனதில் கொண்டு பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடையை கண்காணிக்கப்பட்டு,  எடை குறைந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு அவர்களின் நலம் காக்கப்படுகிறது.

4. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்கள் வழங்கும் ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பொட்டகம்’ என்ற புதிய திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2015-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

5. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம்

கைக்குழந்தைகளுடன் பெண்கள் வெளியில் செல்வதே பெரும்பாடானது, அதிலும் பாலூட்டும் தாய்மார்கள் பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாமல் தவிப்பார்கள், இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 

6. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்!

மகப்பேறு மாதம் வரை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்ற மூலிகைகளைத் தருவதுதான் ’அம்மா மகப்பேறு சஞ்சீவி  திட்டம்’ இதன் மூலம், மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க 11 வகை மூலிகை மருந்துகள் அடங்கியிருக்கும் மருத்துவக் குணமுள்ள மூலிகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

 

Exit mobile version