கொரோனா சிறப்பு மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் என்ன?

சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி நிலையத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மருத்துவமனையின் சிறப்பம்சங்களை காணலாம். கிங் ஆராய்ச்சி நிலையத்தில் 136 கோடியே 86 லட்சம் மதிப்பில் 750 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்துடன் சேர்த்து 4 தளங்களில், பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அடித்தளத்தில் வரவேற்பறை, அதிநவீன சிகிச்சை பிரிவு, ரத்த மாதிரிகள் சேகரிப்பதற்கான பிரிவுகள் உள்ளன. தரைத்தளத்தில் சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ரா ஹோலோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அமைந்துள்ளன. முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் அறுவை சிகிச்சை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மூன்றாவது தளத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா பயிற்சி மேற்கொள்வதற்கான கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் காணொலி மூலம் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களுடன் உரையாட அதிநவீன வசதி செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஜனுடன் கூடிய 300 படுக்கைகள் , 60 தீவிர சிகிச்சை அறைகள், 40 சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள், 100 மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சிறப்பான முறையில் சிகிச்சையளிக்க அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், ராஜிவ் காந்தி பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை மருத்துவர்கள் இடம் பெற்றுள்ளனர். சிறப்பு மருத்துவமனை எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். எவ்வித கால தாமதமும் இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version