‘சரபங்கா நீரேற்று பாசனத் திட்டத்தால்' மக்கள் அடையும் நன்மைகள் என்னென்ன?

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரைக் கொண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீர்வழங்கும் ‘சரபங்கா’ நீரேற்று பாசனத் திட்டத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ‘சரபங்கா நீரேற்று பாசனத் திட்டம்’ என்றால் என்ன? இந்த திட்டத்தால் மக்கள் அடைய உள்ள நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி பார்க்கலாம்.

விவசாயிகளின் முதல்வர் என்று அன்போடு அழைக்கப்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு விவசாயத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கரிகாலச் சோழன் கண்ட குடிமராமத்துத் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தது, மேட்டூர் அணையை வரலாற்றில் முதன்முறையாக தூர் வாரியது, 60 ஆண்டுகளுக்கும் மேல் கிடப்பில் இருந்த ‘அத்திக்கடவு – அவிநாசி’ திட்டத்திற்கு தீர்வு கண்டது என தமிழக முதலமைச்சரின் விவசாயத் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த சாதனை மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கக் கல்தான் இந்த ‘சரபங்கா நீரேற்று பாசனத் திட்டம்’.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது திறந்துவிடப்படும் உபரி நீரானது கடலில் கலந்து வீணாகும் நிலை உள்ளது. இந்த உபரி நீரைத் தங்கள் பகுதியின் விவசாயத்திற்கு திருப்பிவிடும்படி எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய சரபங்கா வடிநிலப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் நெடுங்காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அந்தத் திட்டத்தை செயல்படுத்த என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்று ஆய்வு செய்ய, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அந்த ஆய்வின் முடிவுகளில் இருந்து, நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம், மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 790 அடியை விட உயரமாக உள்ளன  என்பதும். எனவே பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு நீர் செல்லாது என்பதால், புவி ஈர்ப்பு விசையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மேட்டூர் அணையின் உபரிநீரைத் திருப்பிவிட முடியாது என்பதும் கண்டறியப்பட்டன.

இதனால் 565 கோடி ரூபாய் மதிப்பிலான நீரேற்று திட்டம் மூலம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீர் வழங்கும் ‘சரபங்கா நீரேற்று பாசனத் திட்டத்துக்கு’ தமிழக முதலமைச்சர் அனுமதி வழங்கினார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தினால் 4 தொகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடைய உள்ள பலன்களைப் பார்ப்போம்.

சரபங்கா நீரேற்று பாசனத் திட்டத்தினால் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 ஏரிகள் மூலம் 49.06 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பயன்பெற உள்ளன.

ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 பஞ்சாயத்துகளில் உள்ள 8 ஏரிகள் மூலம் 297.27 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  4 பஞ்சாயத்துகளில் உள்ள 4 ஏரிகள் மூலம் 333.41 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும் பயன்பெற உள்ளன.

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 9 பஞ்சாயத்துகளில் உள்ள 28 ஏரிகள் மூலம், 1,129.60 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 8 பஞ்சாயத்துகளில் உள்ள 21 ஏரிகள் மூலம் 1,533.72 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும் பயன்பெறவுள்ளன.

நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 பஞ்சாயத்துகளில் உள்ள, 11 ஏரிகள் மூலம் 193.49 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும் பயன்பெற உள்ளன.

சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 3 பஞ்சாயத்தில் உள்ள 7 ஏரிகள் மூலம் 170.23 ஏக்கர் நிலங்களும், தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 பஞ்சாயத்துகளில் உள்ள 7 ஏரிகள் மூலம் 441.89 ஏக்கர் நிலங்கள் மற்றும் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 2 பஞ்சாயத்துகளில் உள்ள 11 ஏரிகள் மூலம் 89.33 ஏக்கர் நிலங்களும் பயன்பெற உள்ளன.

மொத்தத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், ஓமலூர், எடப்பாடி மற்றும் சங்ககிரி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 40 பஞ்சாயத்துகளில் உள்ள 100 ஏரிகளின் மூலம் 4238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டத்தினால், சேலம் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். மேலும் சேலம் விவசாயிகளின் சாகுபடிகள் எளிமையாக நடக்க வழி ஏற்படும். 100 ஏரிகளில் நிரம்பும் நீரால் சேலம் மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் தவிர்க்கப்படும்.

Exit mobile version