இந்தியப் பிரதமர் மோடி தொடர்ந்து பலநாட்டு அரசியல் தலைவர்களை சந்தித்து
வருகிறார். பிறநாட்டின் அரசியல் தலைவர்களும் இந்தியா வர விருப்பம்
காட்டுகின்றனர் – இதன்மூலம் இந்தியா உலக அரங்கில் சாதிப்பது என்ன?
கடந்த ஆகஸ்டு மாதம் 26ஆம் தேதி ஜி-7 மாநாட்டின் போது பிரதமர் மோடி அமெரிக்க
அதிபர் டிரம்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இதனால் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுமோ? – என்ற அச்சம் முற்றாக முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாளை ரஷ்ய அதிபர் புதினை ரஷ்யாவில்
சந்திக்கிறார். ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கில் நடக்கும் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி, சிறப்பு
விருந்தினராக கலந்து கொள்கிறார்.
மேலும், வரும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர்
ஜி ஜிங்பிங்-கின் சந்திப்பு நடக்க உள்ளதாகவும் தகவல்கள் உள்ளன. இந்நிலையில்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு வருகைதரத் திட்டமிட்டு
உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இப்படியாக இந்தியப் பிரதமர்
சர்வதேச தலைவர்களுடன் மேற்கொள்ளும் சந்திப்புகள் அனைத்தும் சர்வதேச அரசியல்
பார்வையாளர்களால் உற்று கவனிக்கப்படுகின்றது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில்,
அந்த நிலைப்பாட்டை பிற நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளதையே இந்த சந்திப்புகள்
உலகுக்கு உணர்த்துகின்றன.
பிரதமர் மோடி தனது முதல் 5 ஆண்டுகால ஆட்சியில் பல முக்கிய அயலுறவுப் பயணங்களை மேற்கொண்டார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்துக்கு இருதரப்பு உறவுகளுக்காக பயணம் மேற்கொண்ட முதலாவது பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜி தீவுகளுக்கும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அமீரகம் மற்றும் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்ற முதலாவது இந்தியப் பிரதர் மோடிதான்.
`சர்வதேச யோகா தினம்’ கடைபிடிப்பது தொடர்பாக நரேந்திர மோடியின் உறுதியான
அழைப்புக்கு ஐ.நா.வில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதன்முதலாக உலகெங்கும் 177
நாடுகள் ஒன்று சேர்ந்து ஜூன் 21 ஆம் தேதியை `ஐ.நா.வில் சர்வதேச யோகா தினமாக’
கடைபிடிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றின.
அப்போதெல்லாம் பிரதமரின் பயணங்களைக் கடுமையாக விமர்சித்தவர்கள் கூட, காஷ்மீர்
விவகாரத்தின் போது இந்தியாவுக்குக் கிடைத்த சர்வதேச ஆதரவைக் கண்டு
அதிசயித்துப் போயினர்.
ஐ.நா.சபை, ஜி 7 நாடுகள், அமெரிக்கா – என்று அத்தனைப் பக்கமும் பாகிஸ்தான்
முட்டி மோதியும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக எந்த நாடும் பேச
முன்வரவில்லை. ஐ.நா.வில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது, ஜி 7
நாடுகள் அனைத்தும் காஷ்மீர் விவகாரத்தில் அமைதி காத்தன, அமெரிக்க அதிபர்
டிரம்ப் முதலில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட விரும்பினாலும், இந்தியாவின்
கடுமையான எதிர்ப்பால் அவரும் பின்வாங்கினார்.
இதனால் உச்சபட்ச மன அழுத்தத்திற்கு ஆளான பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்
அணுஆயுதப் போர் குறித்தெல்லாம் பேசினார். பின்னர் சர்வதேச அழுத்தத்தால்
தற்போது, ‘அணு ஆயுதப் போரை ஒருபோதும் பாகிஸ்தான் தொடங்காது’ – என அறிவித்து
உள்ளார். உலக அரங்கில் இந்தியாவுக்கு உள்ள செல்வாக்கு இதெல்லாம் ஆதாரங்களாக
உள்ளன. ஏன் உலக அரங்கில் இந்தியாவுக்கு செல்வாக்கு தேவை? – என்றால்,
இந்தியாவின் அமைவிடம் மற்றும் தேவைகளால் நமது நாட்டின் பொருளாதாரம் அமெரிக்கா,
ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகள் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. அமெரிக்காவின்
தொழில்துறையை நம்பி, இந்தியாவின் வேலைவாய்ப்புகள் மற்றும் சந்தைகள் உள்ளன.
இப்போது உலகப் பொருளாதார நெருக்கடியால் அமெரிக்காவும், சீனாவும் பாதிப்புக்கு
உள்ளாகும் போது, ரஷ்யாவுடனான தொடர்பை இந்தியா மீண்டும் செம்மைப்படுத்துவது
இன்றியமையாததாக உள்ளது. கச்சா எண்ணெய் தேவைகளுக்காக இந்தியாவுக்கு வளைகுடா
நாடுகளுடன் நல்லுறவு தேவைப்படுகின்றது. இத்தனையையும் கருத்தில் கொண்டே
பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களும், வெளிநாட்டுத் தலைவர்களின் இந்திய
வருகைகளும் அமைகின்றன.
இப்போது, இந்தியாவின் அருகே இருக்கும் பாகிஸ்தானும், சீனாவும் வரலாறு காணாத
பொருளாதார நெருக்கடியில் உள்ளன. பாகிஸ்தான் அதிபர் அலுவலகம் மின்சாரக் கட்டணம்
கூட செலுத்தமுடியாத நிலையில் உள்ளது, சீன அரசோ 27 ஆண்டுகளில் இல்லாத ஜிடிபி
வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
உலக நாடுகளின் பொருளாதாரமும், உலகநாடுகள் இடையேயான அரசியல் உறவுகளும்
மிகப்பெரும் சீர்ழிவைக் கண்டுள்ள இன்றைய காலகட்டத்தில், இந்தியப் பிரதமர்
சர்வதேச அரங்கில் தொடர்ந்து பெற்றுவரும் விருதுகளும், அழைப்புகளும் மிக
முக்கியமானவை. அவை சீனாவும், பாகிஸ்தானும் கலக்கம் அடையவும், இந்தியாவின்
பொருளாதாரமும் பலமும் உயரவும் மறைமுகமாகப் பேருதவியைப் புரிந்துவருகின்றன.
Discussion about this post