மத்திய நிதிநிலை அறிக்கையில், நதிநீர் இணைப்பு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு போன்ற அறிவிப்புக்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரவேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அம்மா அரசின் கனவுத்திட்டமான கோதாவரி – காவிரி இணைப்பினை நிறைவேற்றிட வேண்டும் என, தாம் பலமுறை கோரிக்கை வைத்த நிலையில், நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு, அண்ணா திமுக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்வதாக, குறிப்பிட்டுள்ளார்.
நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க சுமார் 44 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
விவசாயத் துறைக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான நிதி ஒதுக்கீடு, மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்டவை போன்ற அறிவிப்புகளை கொண்ட நிதிநிலை அறிக்கை, நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் வகையில் உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
அதே போன்று, 5ஜி சேவை, 60 லட்சம் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்புகளுக்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதே சமயம், தொடர்ந்து 9 ஆண்டுகளாக வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பது, மாத சம்பளதாரர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
குடைக்கு வரியை உயர்த்திவிட்டு, வைரத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், குடைக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post