கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அந்தத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் 8 மாதங்கள் ஆகியும் இன்னும் வரவில்லை. ஆனால் அதிமுக ஆட்சிகாலத்தில் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு காலத்தில் கடைசியாக குரூப் 4 தேர்வுகள் நடந்தது. அன்றைக்கு வெறும் 72 நாட்களிலேயே தேர்வு முடிவுகளானது வெளியானது. ஆனால் இந்த திமுக ஆட்சி காலத்தில் 8 மாதங்கள் ஆகியும் இன்னும் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இதனால் தேர்வர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். அரசுத் தேர்வினை நம்பி பல லட்சக் கணக்கானோர் ஆண்டு முழுவதும் தயாராகி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு அவர்களின் வாழ்வில் விளையாடி வருகிறது என்று பல தரப்புகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
மார்ச் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் மாதம் பிறந்தும் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் அரசு மற்றும் டிஎன்பிஎஸ்சி தரப்புகளிலிருந்தும் வராததால் தேர்வர்கள் பலர் #WeWantGroup4Results என்ற ஹாஸ்டேக்கை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றார்கள். அரசு விரைவில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகளையும் வைத்து வருகிறார்கள்.