சித்த மருத்துவர் தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு மீதான தீர்ப்பை, அக்டோபர் 1ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பிய சித்த மருத்துவர் தணிகாசலத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தணிகாச்சலத்தின் தந்தை கலியபெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சித்த மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், சித்த மருத்துவ பிரிவில் இணை ஆலோசகர் பதவி கலைக்கப்பட்டது ஏன் எனவும், சித்த மருத்துவப் பிரிவில் எத்தனை பதவிகள் காலியாக உள்ளன என்பது குறித்து பதிலளிக்க ஆயுஷ் அமைச்சகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சித்த மருத்துவப் பிரிவில் எந்த பதவியும் கலைக்கப்படவில்லை என்றும், காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடத்தை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மற்ற மருத்துவ முறைகளைப் போன்று இந்திய மருத்துவ முறையையும் சமமாக ஊக்கவிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் வழங்கும் அளவுக்கு, கபசுர குடிநீர் தற்போது அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்திய மருத்துவ முறை மற்றும் மருத்துவமனை ஊக்குவிப்பது தொடர்பான திட்டம் குறித்து பதில் அளிக்க மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், சித்த மருத்துவர் தணிக்காசலம் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை அக்டோபர் 1ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.