காஷ்மீரில் பொதுத் தேர்தல் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் பா.ஜ.க – மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி முறிந்ததால் கடந்த 6 மாதங்களாக கவர்னர் ஆட்சி அமலில் இருந்தது. அது முடிவடைந்ததையடுத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் கட்சிக்கு, பா.ஜ.க, முட்டுக்கட்டை போடுவதாக, எதிர்க்கட்சிகள், பொய் பிரசாரம் செய்வதாகவும், அங்கு தேர்தல் நடத்த, மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.