பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதாவிற்கு மாநிலங்களவையில் அ.தி.மு.க. கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.
மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்துள்ளது. மக்களவையில் இந்த சட்ட மசோதா மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு பெற்று நிறைவேறியது. இந்த நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய பா.ஜ.க. அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் 7 மாதம் கழித்து இந்த மசோதாவை தாக்கல் செய்வது ஏன்? என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. வேலை வாய்ப்பை உருவாக்க இயலாத பா.ஜ.க. அரசு ஒதுக்கீடு பற்றி பேசுவதாக அக்கட்சியின் அனந்த் சர்மா விமர்சித்தார். மேலும் பேசிய அவர், இந்த மசோதாவால் இந்தியாவின் 800 ஆண்டு வறுமை ஒழிந்து விடுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சமாஜ்வாடி கட்சி சார்பில் பேசிய ராம் கோபால் யாதவ், இதர பிற்படுத்தபட்ட மக்களுக்கு 54 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். தலித்துகளை காட்டிலும் இஸ்லாமியர்கள் மிகவும் பின் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க. சார்பில் பேசிய நவநீத கிருஷ்ணன் எம்.பி, பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் மசோதாவால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்றார். தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்திற்கு பின்னர் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படுகிறது.
நரசிம்மராவ் ஆட்சியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்தபோது உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் நவநீதிகிருஷ்ணன் தெரிவித்தார். நாடாளுன்ற மாநிலங்களவையில் பேசிய அவர் 10 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார்.
இதேபோல், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகிதம் இடஒதுக்கீடு மசோதாவிற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய அவர், இந்த மசோதாவை தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.