’நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசே ஈடுபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ – சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

chennai highcourt

இயற்கையை வஞ்சித்தால் பூகம்பம் போன்ற பேரிடர்கள் நிச்சயம் ஏற்படும் என்றும், பொதுமக்கள் மட்டுமன்றி, நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசே ஈடுபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், அயனம்பாக்கத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை தலைமை நீதிபதி முனீஸ்வரர்நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பில், விளக்கமளிக்க அவகாசம் அளிக்காமல் ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து அரசு சாலை அமைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இதற்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீர்நிலையை பாதுகாப்பது அரசின் கடமை என தெரிவித்த நீதிபதிகள், அதிகாரிகளுக்கு தெரியாமல் ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பில்லை எனக் கூறினர்.

நிலம் தங்களுக்கு சொந்தம் என்பதை மனுதாரர்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும், பொது மக்கள் மட்டுமன்றி, நீர்நிலை ஆக்கிரமிப்பில் அரசே ஈடுபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version