கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்துக் குறைவு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 62 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கேரள, கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்று காலையில் இரண்டு அணைகளிலும் இருந்து விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இருப்பினும் இரு அணைகளும் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 29 ஆயிரத்து 517 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து 32 ஆயிரத்து 708 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது. இரு அணைகளிலும் இருந்தும் மொத்தம் 62 ஆயிரத்து 225 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகத்தில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர் குறைக்கப்பட்டதால் தமிழக எல்லையில் நேற்று மாலை நீர்வரத்து விநாடிக்கு 75 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் குறைந்து 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் ஆற்றில் பரிசல்களை இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து ஏழாவது நாளாக நீடிக்கிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி108 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 75 டிஎம்சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்குப் பத்தாயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு ஐந்நூறு கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Exit mobile version