நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் நீர்வரத்து தொடங்கியுள்ளதால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கி, முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வினாடிக்கு 375 கனஅடி வரை நீர் வரத்து இருந்ததால், நீர்மட்டம் ஒரு அடி வரை உயர்ந்தது. இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக மழை இல்லாததால், அணைக்கு வரும் நீரின் வரத்து முற்றிலும் நின்று போனது. இதனால் முதல் போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் நீர் திறக்க முடியவில்லை. இதேபோல், கூட்டு குடிநீர் திட்டத்திற்கும், நீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்வதால் நேற்றிரவு முதல் அணைக்கு நீர்வரத்து மீண்டும் தொடங்கியது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 193 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மழை தொடர்வதால், நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அணையின் நீர்மட்டம் இரண்டு மாதங்களுக்குப் பின் முதன்முறையாக 112 அடியாக உயர்ந்துள்ளதால் தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவும் 100 கன அடியாக அதிகரித்துள்ளது. மழை தொடர்வதால் இந்த மாத இறுதியில் முதல் போக சாகுபடிக்காக நீர் திறக்க கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.