அரசுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் நிலத்தடி நீரை எடுக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை நீக்கக் கோரியும், தண்ணீரை கனிமவளப் பிரிவில் இருந்து நீக்க கோரியும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 4,500 தண்ணீர் லாரிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றன.
இந்நிலையில் முதலமைச்சருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு, தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்துடன் தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக கூறினார். 3 நாட்களாக நடைபெற்று வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர் தெரிவித்தார்
Discussion about this post