சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 புள்ளி 45 அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19 ஆயிரம் கன அடியில் இருந்து, 27 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 113 புள்ளி 45 அடியாகவும், அணையின் தற்போதைய நீர் இருப்பு 83 புள்ளி 409 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீரும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதேபோன்று, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றைய நிலவரப்படி கல்லணையில் இருந்து காவேரியில் 2 ஆயிரத்து 631 கன அடி நீரும், வெண்ணாற்றில் 2 ஆயிரம் கன அடி நீரும், கல்லணை கால்வாயில் 501 கன அடி மற்றும் கொள்ளிடத்தில் 3 ஆயிரத்து 4 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.