மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 34 ஆயிரத்து 722 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கு 8 ஆயிரத்து 347 கனஅடியாக இருந்த நீர்வரத்து, 34 ஆயிரத்து 722 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 114 புள்ளி 83 அடியாகவும், நீர் இருப்பு 82 புள்ளி 78 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக, வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர் வரத்து 6 ஆயிரத்து 422 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 9 ஆயிரத்து 756 கனஅடியாக உள்ளது. நீர் இருப்பு 26 புள்ளி 8 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 16 ஆயிரத்து 225 கன அடி நீரும் , கபினி அணையில் இருந்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் பயணத்திற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.