முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் தொடர் கனமழை காரணமாக அணையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
தமிழக – கேரள எல்லையில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் 112 அடிக்கும் கீழாக குறைந்தது. இந்தநிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியார் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று இரவு பெரியார் பகுதியில் 26.6 மில்லி மீட்டரும், தேக்கடி பகுதியில் 24.6 மில்லி மீட்டரும் கன மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு 325 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 2 மாதங்களுக்குப் பின் முதன் முறையாக உயர்ந்து 112.15 அடியாக உள்ளது.
இதனால் தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கான திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடி அதிகரித்துள்ளது. எனவே, இம்மாத இறுதியில் முதல் போக சாகுபடிக்கு நீர் திறக்கும் சூழல் உருவெடுத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post