நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க ஜல்சக்தி அபியான் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சனை அதிகமாக உள்ள நிலையில் இந்த பிரச்சனையை சரிசெய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு ஜல்சக்தி அபியான் திட்டத்தை துவக்கியுள்ளது. நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கென 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு ஏற்கனவே நியமித்துள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இவர்கள் இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.
மேலும் மத்திய, மாநில நீர்வளத்துறை இயக்குநர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த திட்டத்தின்கீழ் செயல்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு அலுவலர், தொழில்நுட்ப அதிகாரி நியமிக்கப்பட்டு, நீர்நிலைகளின் அளவை கண்காணிக்க முப்பரிமாண படம் உருவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய நீர் சேகரிப்பு முறைகளை பின்பற்ற சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் எனவும் அறிவித்துள்ளது.
தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்த இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பொதுமக்களும் பங்கெடுத்து, தங்களின் ஆலோசனைகளை வழங்கலாம் என அமைச்சகம் சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.