கடலூர், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கஜா புயல் இன்று கரையை கடப்பதால் கடலூர், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 380 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு தென்கிழக்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் என வேகம் குறைந்து தமிழகத்தை நோக்கி கஜா புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலானது, வலுப்பெற்று தீவிர சூறாவளி புயலாக மாறும் என்றும் அதன் பின்னர் வலு குறைந்து, கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கரையை கடக்கும் போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திற்கு சூறாவளிக் காற்று வீசும் என்றும் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வரையிலும் வீசலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் கனமழை முதல் அதிக கனமழை இருக்கும் என்றும் மற்ற பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடலூர், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Exit mobile version