நாகை மாவட்டம் கோடியக்கரையில், மீனவர்களுக்கு 3 கோடி ரூபாய் செலவில் வாக்கி டாக்கி டவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீனவர்களின் தகவல் தொடர்புக்காக, கோடியக்கரை கடற்கரையில், 187 மீட்டர் உயரம் கொண்ட வாக்கி டாக்கி டவர் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில், கஜா புயலில் அந்த டவர் முற்றிலும் சேதமடைந்தது. இந்த பணி மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த டவரில், தற்போது 75 மீட்டர் உயரம் வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முழுமையடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனவர்களுக்கு தற்போது வாக்கி டாக்கி வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் கடலில் எந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தாலும், இந்த தொழில்நுட்பத்தின் மூலம், அவர்கள் இருக்கும் பகுதியை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இதனிடையே, இந்த வசதி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.