ஆசியக் கோப்பை கிரிக்கெட் பொட்டியானது தற்போது நடைபெற்று வரும் நிலையில், அப்போட்டி சூப்பர் 4 கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இந்த சூப்பர் 4 போட்டிகளில் களமிறங்கியுள்ளன. இப்போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் பலப் பரிட்சை மேற்கொண்டன. இந்தப் போட்டி மழையின் காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் ஆட்ட முடிவில் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் அரை சதம் எடுத்த கையோடு தங்களது விக்கெட்டினை இழந்திருந்தனர். அப்போது மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் அடுத்த நாளான நேற்று தொடங்கப்பட்டது. 25.5 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் விராட் கோலியும் கே.எல். ராகுலும் இணைந்து 233 ரன்களை குவித்திருந்தனர். இருவரும் சதம் அடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி 122 ரன்கள் எடுத்து மிரட்டியிருந்தார். இறுதி ஓவரின் இறுதி பந்தில் ஒரு சிக்சர் அடித்து அபாரமாகவும் பினிஷிங் செய்திருந்தார்.
பிறகு பாகிஸ்தான் அணியை 132 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா. பந்துவீச்சில் முக்கியமாக இந்தியாவின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இதனைத் தான் பேசுபொருளாக மாற்றியுள்ளார் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர், சர்ச்சைக்கு பெயர்போன கவுதம் கம்பீர். அவர் கூறியதாவது, இந்தப் போட்டியைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதினைக் கொடுத்திருக்கக் கூடாது. மாறாக குல்தீப் யாதவிற்கு கொடுத்திருக்க வேண்டும். இந்த பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. அப்படி சிரமமாக இருந்தும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் குல்தீப் யாதவ். பாகிஸ்தான் பேட்டர்கள் ஸ்பின் பவுலர்களை லாவகமாக கையாளக்கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக பந்துவீசி விக்கெட் வீழ்த்தியிருப்பது ஒருவகை அசாத்திய திறமை. இந்த தருணத்தில் குல்தீப் யாதவிற்கு ஆட்ட நாயகன் விருதினைக் கொடுத்திருந்தால், ஒரு பெரிய அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியதற்கு அவருக்கு கிடைத்திருக்கும் உத்வேகமாக இந்த விருதி அமைந்திருக்கும் என்று கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.
தோனி, கோலி என்றாலே கம்பீருக்கு ஆகாது என்பது காலம் காலமாக கிரிக்கெட் பார்த்து வரும் ரசிகர்களுக்கே தெரியும். தற்போது இப்படி கருத்து தெரிவித்திருப்பது என்பது, கம்பீருக்கு புதிது அல்ல. இருந்தாலும் நமது நெட்டிசன்கள் அவரை சும்மா விடுவார்களா என்ன? விராட் கோலி போன்று ரசிகர் படையை அதிகம் வைத்திருக்கும் ஒரு கிரிக்கெட் நட்சத்திரத்தை பற்றி தவறாகவோ, அவதூறாகவோ அல்லது அவரது திறமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் பேசினாலோ அவ்வளவுதான். இணையமே பரபர என்று பத்திக் கொண்டு எரியும். அப்படி பத்தி எரியும் படியான வேலையைத் தான் தற்போது கம்பீர் பார்த்துள்ளார்.
Discussion about this post