விழுப்புரம் நகராட்சியின் நூற்றாண்டையொட்டி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் நகராட்சி தொடங்கப்பட்டு 100 ஆண்டு காலம் நிறைவடைந்ததை அடுத்து, நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது . விழுப்புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சட்டக்கல்லூரி மற்றும் மகளிர் கலைக்கல்லூரி கட்டிடங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். இதையொட்டி நகரம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகராட்சியின் நூற்றாண்டையடுத்து, அங்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு நகராட்சி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடைபெற உள்ளன. கடந்த 1919ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி, அதுவரை கிராமப் பஞ்சாயத்தாக இருந்த விழுப்புரமானது நகராட்சி என்ற தகுதியை முதன்முறையாக அடைந்தது. பூந்தோட்டம், கீழ்ப்பெரும்பாக்கம், மகாராஜபுரம் மற்றும் மருதூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக, 33 வார்டுகளைக் கொண்ட மூன்றாம் நிலை நகராட்சியாக விழுப்புரம் அங்கீகரிக்கப்பட்டது. அப்போதைய விழுப்புரம் நகராட்சியின் மொத்த பரப்பளவு வெறும் 8.36 சதுர கிலோ மீட்டர்கள்தான்.
பின்னர் 1953ஆம் ஆண்டில், இரண்டாம் நிலை நகராட்சியாகவும், கடந்த 1975ல் முதல்நிலை நகராட்சியாகவும், கடந்த 1988ஆம் ஆண்டில் தேர்வுநிலை நகராட்சியாகவும் விழுப்புரம் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 1993ஆம் ஆண்டில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் பிரிக்கப்பட்ட போது ’மாவட்டத் தலைநகரம்’ என்ற சிறப்பையும் பெற்றது விழுப்புரம்.
தற்போது, 33.13 சதுர கி.மீ. பரப்பளவுடன், 42 வார்டுகளைக் கொண்ட தேர்வுநிலை நகராட்சியாக விழுப்புரம் நகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நகராட்சியில், 183.17 கிலோ மீட்டர் சாலைகள், 6,367 தெரு விளக்குகள், 33 வார்டுகளில் பாதாள சாக்கடை வசதி மற்றும் 14 ஆயிரம் குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நகராட்சியின் ஆண்டு வருமானமான 28.68 கோடி ரூபாயினைக் கொண்டு, மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி, விழுப்புரம் நகரில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 625 பேர் வசிக்கின்றனர்.
விழுப்புரம் நகராட்சியின் 100ஆவது ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், நகராட்சி மேம்பாட்டுத் திட்டத்துக்காக, 50 கோடி ரூபாய் ஒதுக்கி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் கடந்த ஜூலை மாதம் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிதி மூலம், பழைய பேருந்து நிலைய குளமானது, நடைபாதை மற்றும் பூங்காவுடன் 1 கோடியே 5 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதேபோல, பழமை வாய்ந்த நகராட்சி அலுவலகம் 4 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படுகிறது. பழைய பேருந்து நிலைய வளாகத்தில், 12 கோடி ரூபாயில் புதிய வணிக வளாகம், 1 கோடியே 10 லட்சம் ரூபாயில் காமதேனு நகர் பூங்கா, 2 கோடியே 90 லட்சம் ரூபாயில் புதிய பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் ஆகியவை நடைபெற உள்ளன.
நகரில் 1 கோடியே 60 லட்சம் ரூபாயில் புதைவழிச் சாக்கடைப் பணிகளும், 33 கோடியே 22 லட்சம் ரூபாயில் புதிய தார் சாலை, சிமென்ட் சாலைகள் அமைத்தல், நான்கு உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்தல், ஆயிரத்து 150 எல்.இ.டி தெரு மின் விளக்குகள் அமைத்தல், நகர ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த திட்டப் பணிகளை, இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
Discussion about this post