இந்தியா-வியட்நாமிடையேயான வர்த்தகம் அடுத்த ஆண்டுக்குள் 15 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். முதல் நாளில் அங்கு உள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடிய அவர், இன்று ஹனோய் நகரில் வியட்நாமின் துணை அதிபர் டாங் தி நோக் திங்கை சந்தித்து பேசினார்.
அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். இதனையடுத்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்ட விவரங்கள் குறித்து விளக்கினர். அப்போது பேசிய வெங்கையா நாயுடு, அடுத்த ஆண்டுக்குள் இந்தியா-வியட்நாம் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என நம்புவதாக கூறினார்.
மேலும் இந்தியா-வியட்நாமுக்கு இடையே நேரடி விமான சேவையை துவங்குவது குறித்து ஆலோசித்ததாக அவர் தெரிவித்தார். முன்னதாக வியட்நாமின் தேசிய வீரர்களின் நினைவிடத்தில் இந்திய குடியரசு துணை தலைவர் மரியாதை செலுத்தினார்.
Discussion about this post