அதிமுக ஆட்சியில், மேம்பாலங்களுக்கு கீழ் அமைக்கப்பட்ட செங்குத்து பூங்காக்கள், திமுக ஆட்சியில் பராமரிக்கபடாமல் கிடப்பில் போட்டது போல்; மேம்பாலங்களில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தி மாநகரின் அழகு மெருகூட்டப்பட்டதும் தற்போது ஒளியிழந்துள்ளது… அதிமுக ஆட்சியில், சென்னை மாநகரில் முன்னெடுக்கப்பட்ட ஸ்மார்ட் திட்ட முயற்சிகளை, திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால் சிதைக்கப்படுவதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, தனி கவனம் செலுத்தியதால், மாநகராட்சிகள் புதுப்பொலிவு பெற்றன. அதன் ஒரு பகுதியாக, தலைநகர் சென்னையை அழகு படுத்துதல், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக, கடந்த அதிமுக ஆட்சியில், 8 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில், சென்னை வடக்கு உஸ்மான் சாலை, மிண்ட், டிடிகே சாலை சந்திப்பு உள்ளிட்ட 16 இடங்களில் உள்ள மேம்பாலங்களின் கீழ், செங்குத்து தோட்டங்கள் அமைக்கப்பட்டன.
பாலத்தின் தூணில், ஒன்றன் மேல் ஒன்றாக 500-க்கும் மேற்பட்ட செடிகள் அழகுற அமைக்கப்பட்டன. கோடை காலங்களில் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பாலத்தின் கீழ் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து, சொட்டு நீர் பாசன முறையில் பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வந்தன. செங்குத்து பூங்கா திட்டம் மக்களிடம் பாராட்டை பெற்ற நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின் செங்குத்து பூங்கா திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, நகர்ப்புற வளர்ச்சி என்ற பெயரில், ஏழை மக்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்படுவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். நகரங்களை மேம்படுத்துவது தேவையான ஒன்று என்பதில் மாற்று கருத்துகள் இல்லை. இருந்தாலும், கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரவேற்பு பெற்ற திட்டங்களை கிடப்பில் போடுவது நியாயமில்லை என்பது, பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
கான்கிரீட் காடுகள் போல் காட்சியளித்த சென்னையை, செங்குத்து பூங்கா திட்டம் மூலம் பசுமையாக்கியது அதிமுக அரசு. ஆனால், தற்போது தண்ணீர் இன்றி செடிகள் காய்ந்து பொலிவிழந்து காணப்படுகின்றன. பல இடங்களில் செடிகளின்றி தொட்டிகள் மட்டும் காணப்படுகின்றன.
அழுகுபடுத்துதல் என்ற பெயரில் நகரமெங்கும் வெள்ளையடித்து வரும் மாநகராட்சியும், அரசும், செங்குத்து பூங்காக்களை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திட்டங்களை முடக்காமல், தொடர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
Discussion about this post