தமிழக முதல்வருக்கு வேலூர் மக்கள் நன்றி

வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்று வேலூர் மாவட்டம். வெயில் நகரம் என்றழைக்கப்படும் வேலூர் மாவட்டம் மேற்கே திருப்பத்தூரையும், கிழக்கே அரக்கோணத்தையும் எல்லைப் பகுதிகளாக கொண்டுள்ளது. மன்னர்களின் ஆட்சிகாலத்தில் வட ஆற்காடு மாவட்டம் ஆக வேலூர் திகழ்ந்து வந்தது. பின்னர் நிர்வாக வசதிக்காக வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்த பல்வேறு நகரங்கள் பிரிக்கப்பட்டு, தனி மாவட்டமாக வேலூர் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் அதிக பரப்பளவு கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் மாவட்டத்தின் தலைநகருக்கு வர முடியாமல் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக திருப்பத்தூரில் வசிக்கும் பொதுமக்கள் அவசர தேவைக்காக மாவட்டத்தின் தலைநகருக்கு வரவேண்டும் என்றால் சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.

இதேபோல், அரக்கோணத்திலிருந்து வரும் பொதுமக்களும் தலைநகருக்கு செல்ல வேண்டும் என்றால், சுமார் 80 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இதனால் தங்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வேண்டும் என்றால், நெடுந்தூரம் பயணித்து வரவேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. மருத்துவ வசதிக்காக தலைமை மருத்துவமனை செல்ல வேண்டும் என்றால், வேலூர் தலைநகருக்கு தான் வர வேண்டும். இதனால் மருத்துவ வசதி பெறுவதிலும் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கடும் சவாலாகவே இருந்து வந்தது.

எனவே வேலூர் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை பிரிப்பது தொடர்பான பொதுமக்களின் கோரிக்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, வேலூர் மாவட்டமானது பிரிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

முதல்வர் தான உறுதி அளித்தபடியே, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவின்போது வேலூர் மாவட்டம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுமென்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் வேலூர் மாவட்ட மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்டம் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வேலூர் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக திருப்பத்தூர் மற்றும் அரக்கோணம் சோளிங்கர் ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முதல்வரின் அறிவிப்புக்கு மிகுந்த மன மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல், கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டாரத்தை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version