வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி.சண்முகம் வழக்கு தொடுத்துள்ளார்.
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட இருந்தனர். இதனிடையே திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு நெருக்கமான நபர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 11 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து வருமான வரித்துறையின் அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்ய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இந்தநிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதி மணிக்குமார் அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.