நில உரிமையாளர்களிடம் பேசி, நிலம் கையகப்படுத்தப்பட்டு வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், நில உரிமையாளர்களிடம் பேசிதான் நிலத்தை கையகப்படுத்த முடியும் என விளக்கம் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், நீலகிரியில் புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிக்காக ஒருசில மரங்கள் வெட்டப்பட்டாலும், ஒரு மரத்துக்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல், சட்டப்பேரவையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம்தான் அதிமுக என தெரிவித்தார். சிறுபான்மையின மக்கள் சார்ந்திருக்கும் எந்த சமூகத்துக்கு தீங்கு ஏற்பட்டாலும், அதை தடுக்க கூடிய அரசாக அதிமுக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.