முழு ஊரடங்கு அறிவிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
முழு ஊரடங்கு எதிரொலியால் கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் 200 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோஸ் 2 000 ரூபாயாக அதிகரித்துள்ளது. நூறு ரூபாய்க்கு விற்ற தக்காளி பெட்டி 500 ரூபாய் வரையிலும், 25 ரூபாய்க்கு விற்ற பச்சை மிளகாய் 150 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்தது. 800 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் ஆயிரத்து 500 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 16 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகவும், ஒரு கிலோ பீட்ரூட் 20 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் விலை அதிகரித்துள்ளது. அதேபோல பீன்ஸ், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. காய்கறிகள் பன்மடங்கு விலை அதிகமாக விற்கப்பட்டது வாடிக்கையாளர்களையும் வியாபாரிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதேபோல தோட்ட கலைத்துறை மூலம் வாகனங்களில் காய்கறி விற்பனை செய்வது நடைமுறை சாத்தியமில்லை என்றும், மொத்த வியாபாரிகளிடம் காய்கறிகள் இருப்பு இல்லாதபோது எப்படி விநியோகிக்க முடியும் என்றும் வியாபாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து முன்பே திட்டம் வகுத்து செயல்படுத்தியிருக்க வேண்டுமென்றும், ஒரே நாளில் திடீரென கூறுவது நடைமுறைக்கு சாத்தியப்படாது என்றும் வியாபாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.