திமுக என்றால் வாரிசு. வாரிசுகளின் கூடாரம் என்றால் திமுக என்றுதான் தற்போது ஆகிவிட்டது. பேரறிஞர் அண்ணா 1949 ஆம் ஆண்டு உருவாக்கிய திமுக, மக்களின் இயக்கமாக இருக்கவேண்டும் என்று கருதியிருந்தார். ஆனால் கருணாநிதி கைக்கு சென்று அது குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது என்பது உலகறிந்த உண்மை. கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், ஸ்டாலினின் மகன் உதயநிதி என்று ஒரு வரிசை இருக்கிறது. இது இல்லாமல் தற்போது அமைச்சரவையிலும் வாரிசுகள் களம் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள்.
முன்னாள் நிதியமைச்சராக இருந்து தற்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், நிதியமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் டிஆர்பி ராஜா, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், முக்கியமாக முதல்வர் ஸ்டாலினின் மகன் விளையாட்டுத்(பிள்ளை) துறை அமைச்சர் உதயநிதி என்று ஒரு பட்டாளமே வாரிசு அரசியலின் வேராக ஊன்றி இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் துணை முதல்வராகக் கூட உதயநிதியைக் கொண்டுவருவதற்கான சூழலை உருவாக்கிவிட்டார்கள் திமுக உடன்பிறப்புகள்.
பொதுமக்களுக்கு உழைக்காமல் தன் மக்களுக்காக உழைக்கும் அரசாக வளர்ந்து இருக்கும் குடும்ப கட்சியின் ஆட்சி மாறும் மற்றும் காட்சியும் மாறும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.