உயிருக்கு பாதுகாப்பற்ற விடியா திமுக ஆட்சியில் தங்களது பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. விஏஓ சங்கத்தினர் இன்னும் என்னென்ன கோரிக்கைகள் விடுத்துள்ளனர்? பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் மாஃபியா கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த சோகத்தில் இருந்து விடுபடுவதற்குள்ளாகவே, சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள மானத்தாள் ஊராட்சியில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற வினோத்குமாரை, மணல் கடத்தல் கும்பல் கொலை செய்ய முயல அவரோ காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து உயிரைக் காத்துள்ளார்.
இதே போல அருப்புக்கோட்டை அருகே உள்ள களக்காரியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் துரை. பிருத்விராஜ், விடியா ஆட்சியில் நேர்மையாகப் பணி செய்ய முடியாது என தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் துரை. பிருத்விராஜ், சிறப்பாகப் பணியாற்றியதால் கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் இருந்து விருது பெற்றவராவார்.
இப்படி விடியா ஆட்சியில் நிகழும் உயிர் அச்சம் காரணமாக தங்களின் பாதுகாப்பு கருதி கைத் துப்பாக்கி வழங்க பரிசீலனை செய்ய வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நேர்மையான கிராம நிர்வாக அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களுக்கு தற்காப்பு பயிற்சி உடனடியாக வழங்க வேண்டும் என்றும், தாங்கள் புகார் அளித்தால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். அதே போல பணி செய்யும் கிராமங்களில்தான் வி.ஏ.ஓக்கள் தங்க வேண்டும் என்னும் விதியை தளர்வு செய்ய வேண்டும், அதே போல கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலகங்களை ஊரின் ஒதுக்குப்புறம் கட்டித் தராமல் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கட்டித்தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழகத்தில், தங்களின் உயிர் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி கேட்கும் அளவுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கை வைத்திருப்பது விடியா ஆட்சியின் வன்முறைக் கலாச்சாரத்தை பட்டவர்த்தனப்படுத்தி உள்ளது.
இனியாவது சமூக விரோதிகளை திமுக ஆட்சி களையெடுக்குமா? அல்லது நேர்மையான அதிகாரிகளை தனது கலெக் ஷன், கமிஷன், கரப்ஷனுக்காக பலி கொடுக்குமா?