தமிழ் ஆராய்ச்சி மற்றும் பதிப்புத்துறையில் தனி இடம் பிடித்த தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளையின் 130-வது பிறந்த நாள் இன்று…
யார் அந்த வையாபுரிப்பிள்ளை? விவரிக்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற தமிழ் அறிஞரான வையாபுரிப்பிள்ளை, நெல்லை மாவட்டம் சிக்கநரசய்யன்பேட்டையில் தோன்றினார்.
இளம் வயதிலிருந்தே வாசிப்பில் நாட்டமுள்ள வையாபுரிப்பிள்ளை, சென்னை மாகாணத்திலேயே தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்று, ‘சேதுபதி தங்கப் பதக்கம்’ பெற்று புகழடைந்தார்.
வழக்குரைஞராக வாழ்வைத் தொடக்கிய இவர், ஆராய்ச்சிகளில் தமக்கிருந்த விருப்பத்தினால் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார்.
பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பேராசிரியராக பணிக்குச் சேர்ந்தார்.
சென்னை பல்கலைக்கழகம் உருவாக்கிய தமிழ்க் கலைக்களஞ்சியத்தைப் பதிப்பித்தார்.
திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் இவர் தமிழ்த்துறை தலைவராக இருந்த காலம், இன்றும் பொற்காலமாகவே கருதப்படுகிறது.
வையாபுரிப்பிள்ளை தமிழ் மட்டுமின்றி சமஸ்கிருதம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.
பதிப்புத்துறையில் புதுமை செய்ய விரும்பிய அவர், சிறந்த பதிப்புக்கான விதிமுறைகளை வகுத்தார்.
சொற்களைப் பிரிக்க சில ஒழுங்கு முறைகளைக் கட்டமைத்தார்.
உவேசாவுக்குப் பின், பழந்தமிழ் இலக்கியங்களைத் தேடித் தேடி பதிப்பித்த பெருமை வையாபுரிப்பிள்ளையே சாரும்.
கம்பன் கவிநடையில் கரைந்துபோன வையாபுரிப்பிள்ளை, தமது நண்பர் ரசிகமணி டிகேசியுடன் இணைந்து நெல்லைக் கம்பன் கழகத்தை நிறுவினார்.
‘தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம்’, ‘இலக்கிய உதயம்’, ‘திராவிட மொழிகளில் ஆராய்ச்சி’, ‘தமிழர் பண்பாடு – கம்பன் காவியம்’, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள இவர், 38-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
ஆராய்ச்சிகளின் ஆர்வலராகவும், நூற்பதிப்பின் நூதனராகவும் விளங்கிய வையாபுரிப்பிள்ளை, காலமும் கனித்தமிழும் உள்ள வரையில் ஆய்வுகளின்மூலம் வாழ்ந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி
Discussion about this post