வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.

வைகுண்ட ஏகாதசியையொட்டித் திருவரங்கம், திருவல்லிக்கேணி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு வைணவத் தலங்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டனர்.

தமிழ் மாதங்களிலேயே சிறந்ததாக மார்கழி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் அதிகாலையில் துயிலெழுந்து குளித்துவிட்டுத் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில் மார்கழியிலும் சிறப்பு மிக்க வைகுண்ட ஏகாதசி நாளன்று சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி குறிப்பிடத் தக்கதாகும். இதையொட்டித் தமிழகத்தில் புகழ்பெற்ற அனைத்து வைணவத் தலங்களிலும் திருப்பதியிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

திருப்பதி கோவிலில் நேற்றுக் காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நள்ளிரவில் நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பையடுத்துப் பக்தர்கள் இறைவனை வழிபட்டனர்.

இதேபோலச் சென்னைத் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலிலும் அதிகாலையில் நடைபெற்ற சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

108 வைணவத் தலங்களிலேயே முதன்மையானதாகக் கருதப்படும் திருவரங்கத்தில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அந்தச் சமயத்தில் அங்குக் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இசைக்கருவிகளை மீட்டியும், கோவிந்தா, அரங்கநாதா என முழக்கமிட்டும் வழிபட்டனர்.

இதேபோல் விழுப்புரம் வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலிலும், கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலிலும், மதுரை சுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் கதவுகள் திறக்கப்பட்டு எழுந்தருளிய பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளையொட்டிக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Exit mobile version