வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலங்கள் மூழ்கியுள்ள நிலையில், அப்பகுதிகளில் போக்குவரத்தைத் தடைசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாலும், கனமழை பெய்வதன் காரணமாகவும் வைகை ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. மேலும், அங்குள்ள தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், இதை பொருட்படுத்தாத பொதுமக்கள் ஆபத்தை உணராமல் பாலத்தின் மீது பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்குள் உடனடியாக தடுப்புகள் அமைத்து பாலத்தின் மேல் போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே வைகை ஆற்றில் மக்கள் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.