வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை தாண்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வெள்ளிமலை, மேகமலை, வருசநாடு, குமுளி மலை ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், முல்லை பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரால் வைகை அணைக்கு தற்போது விநாடிக்கு 2 ஆயிரத்து 992 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி 65.55 அடியில் இருந்த நீர்மட்டம் பிற்பகலில் 66.01 அடியாக உயர்ந்தது. இதையடுத்து வைகை கரையோர மக்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஓரிரு தினங்களில் வைகை அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.