கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி நீர் மட்டம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, பெரியாறு பாசன பகுதியில் முதல்போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணையில் இருந்து நீரை திறந்து வைத்தார். அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதனிடையே 5 மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.