கோயில் குளத்தைச் சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
கோயில் குளத்தைச் சுற்றியுள்ள இடத்தை இப்படி ஆக்கிரமிப்பு செய்த வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரசித்தி பெற்ற சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இப்பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் கோயில் குளத்தைச் சுற்றி கார்களை நிறுத்துகின்றனர்.
மேலும், இருசக்கர வாகனம் மற்றும் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளவர்கள், தங்களிடம் பழுது பார்க்க வரும் வாகனங்களையும், குளத்தைச் சுற்றி நிறுத்துகின்றனர். இதனால் கோயில் வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர்.
கோயில் வளாகம் என்று கூட பார்க்காமல் குப்பைக் கொட்டும் தொட்டிகளையும் அதன் அருகேயே வைத்து அசுத்தம் செய்ய வழிவகுக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். இதுகுறித்து இப்பகுதி மக்களும், பக்தர்களும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் திருவிழாக்களின் போது பக்தர்கள் அதிக அளவில் வரும் போது, கடுமையான நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ஆனாலும், இந்த வாகனங்களை அகற்ற, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நவடிக்கை எடுப்பதில்லை.
கொரோனா லாக்டவுன் காலத்தில் கோயில் பின்புறம் கோபுரம் கதவு மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது வரை இந்த பின் வாசல் கதவை திறக்காமல் வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் கோயில் என்று கூட பார்க்காமல் பின் வாசலில் அமர்ந்து மது அருந்துவதும், புகை பிடிப்பதுமாய் இருக்கின்றனர். இதனால் இரவு அப்பகுதியை கடக்கும் பெண்கள் அச்சத்துடனே நடமாட வேண்டிய நிலை உள்ளது.
கோயிலைச் சுற்றியுள்ள இத்தனை ஆக்கிரமிப்புகளையும் விரைவில் அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.