ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப்போட்டியில் நவோமி ஒசக்கா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் தரவரிசையில் 4-ம் நிலை வீராங்கனையும், ஜப்பானை சேர்ந்தவருமான நவோமி ஒசக்கா, 7-ம் நிலை வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடந்த போட்டியில், முதல் செட்டை 6க்கு 2 என்ற கணக்கில் வென்ற ஒசக்கா, அடுத்த செட்டை 4க்கு 6 என்ற கணக்கில் பறிகொடுத்தார். பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோல், மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி போட்டியில், தரவரிசையில் 8 ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா கவிடோவா, அமெரிக்காவின் டானியெல்லே ரோஸ் காலின்ஸை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில், 7 க்கு 6, 6 க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் காலின்ஸை வீழ்த்தி பெட்ரா கவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நவோமி ஒசாகா – பெட்ரா கிவிட்டோவா பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் நடந்த போட்டியில், ஃப்ரான்ஸின் பியரி ஹூகியூஸ் ஹெர்பர்ட், நிகோலஸ் மகுட் இணை, அமெரிக்காவின் சாம் குயூரே, ரியான் ஹாரிசன் இணையை 6 க்கு 4, 6 க்கு 2, என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ், பின்லாந்தின் ஹென்றி கொண்டினேன் இணையை எதிர் கொள்ள உள்ளது.

Exit mobile version