பராமரிப்பு தொகை கொடுக்காததால் சென்னையில் பல்வேறு திட்டங்களின் கீழ் தொடங்கப்பட்ட பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பில்லாமல் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
விடியா ஆட்சியில் இப்படி பராமரிப்பில்லாமல், மக்கள் பயன்படுத்தக் கூட முடியாத நிலையில் உள்ளன பொதுக்கழிப்பறைகள்…
மக்கள் தொகை அதிகம் கொண்ட சென்னை மாநகரில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி நிதியுடனும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழும், மத்திய
அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் நிதி உதவியுடனும் ஆயிரக்கணக்கான பொது கழிப்பிடங்களும், சிறுநீர் கழிப்பிடமும் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் இ டாய்லெட் என்ற பெயரிலும் சிறுநீர் கழிப்பிடமும்,
பொதுக்கழிப்பிடமும் நடைமுறையில் இருந்தது. ஆனால், விடியா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இ டாய்லெட் கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் மூடி கிடக்கும் அவல நிலையில் உள்ளது. அது மட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கழிப்பறைகளுக்கும் மாதாந்திர பராமரிப்பு தொகை கொடுக்காததால் அதன் பராமரிப்பாளர்கள் அவற்றை முறையாக பராமரிக்காமல் பாழடைந்து காணப்படுகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அதிகமுள்ள ஹாடோஸ் சாலையில் அண்மையில் கட்டப்பட்ட கழிப்பிடம் ஒன்று பரமரிக்க ஆள் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது.
இது குறித்து பொதுக்கழிப்பிடங்களை ஏலத்துக்கு எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது, கடந்த 6 மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகையை சென்னை மாநகராட்சி கொடுக்காததால், அவற்றை பராமரிக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டதாக கூறுகின்றனர். சென்னையில், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, உயர்நீதிமன்ற வளாகம் என்பன உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காததால் கழிப்பறைகள் பராமரிப்பில்லாத நிலையில் காணப்படுகின்றன.
திட்டங்களை தொடங்கும் போது கமிஷன் தொகை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் புதிய புதிய கழிப்பிடங்களை திமுக அரசு தொடங்கினாலும், அவற்றை பராமரிக்க ஒதுக்கிய நிதியையும் ஒதுக்காததால் அவை அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கழிவறைகளை புதிதாக கட்டி திறக்கும்போது போஸ் கொடுக்க அமைச்சர்களுக்கும், மேயருக்கும் இருக்கும் ஆர்வம் அவற்றை பராமரிப்பதிலும் இருக்க வேண்டும் என்கின்றனர் பொது மக்கள்.
Discussion about this post