பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இடஒதுக்கீடு சட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பவர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். 50 சதவிகிதமாக இருக்கும் இடஒதுக்கீட்டை 60 சதவிகிதமாக உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.