சென்னை நந்தனம் புத்தக காட்சியில், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அரங்கம், வாசகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்துள்ளது.
43-வது சென்னை புத்தகத் திருவிழா, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கடந்த 9-ஆம் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 400 பதிப்பகங்களின், 700க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக, இந்த வருடம் தமிழக தொல்லியல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அகழ்வாய்வு அரங்கம், வாசகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அரங்கில், கீழடி அகழ்வாய்வு குழி, உறை கிணறு, கீழடியில் உள்ள பண்டைய நீர் மேளாண்மை அமைப்பு, பானை வளைதல் தொழிட்நுட்பத்தில் உருவான பொருட்கள், திமில் காளையின் எழும்புகள் உள்ளிட்ட பல தொல்லியல் பொருட்களின் மாதிரிகள் மற்றும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த அரங்கிற்குள் வரும் பார்வையாளர்கள் மற்றும் வாசகர்கள், இதனை சாதாரணமாக கடந்து செல்லாமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள மாதிரிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், குறிப்புகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. இதை படித்துவிட்டு மட்டும் செல்லாமல், அனைவரும் செல்ஃபியும் எடுத்தச் செல்கின்றனர்.
புத்தகத்தில் மட்டுமே தொல்லியல் ஆய்வுகளை பார்த்த தங்களுக்கு, அதனை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் அனுபவத்தை இந்த அரங்கம் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர் பள்ளி மாணவிகள்.
மேலும், இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ள மெய் நிகர் காட்சிக் கூடம், அனைவரையும் வரிசையில் காத்து நின்று பார்த்துச் செல்ல தூண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, கீழடி அகழ்வாய்வு குறித்து விளக்கும் பல மொழி சார்ந்த புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.