சென்னையில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்களை திருடி வாடகைக்கு ஓட்டி சம்பாதித்து வந்த கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பிரகாஷ் மற்றும் பஷீர் ஆகிய இருவரும், இரவில் நிறுத்தப்பட்ட தங்களது ஆட்டோவை காணவில்லை என்று சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதேபோன்று சைதாப்பேட்டையிலும் மற்றுமொரு ஆட்டோ காணவில்லை என்று புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக திருவல்லிக்கேணி துணை ஆணையர் சுகுணாசிங் உத்தரவின் பேரில் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்…
ஆட்டோக்களை காணவில்லை என புகார் அளித்த பிரகாஷ் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குருவப்பா தெருவிலும், பஷீர் என்பவர் எம்.எம்.காலனி பகுதியில் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில், இரண்டு நபர்கள் ஆட்டோக்களை திருடிச் செல்லக்கூடிய சிசிடிவி காட்சிகள் சிக்கியது. அதனை கொண்டு தீவிரமாக ஆட்டோ பதிவு எண்களையும் அவர்கள் ஆட்டோக்களோடு செல்லும் சிசிடிவி தடயங்களை வைத்து வேலூர் மாவட்ட சின்ன அல்லா புரத்தைச் சேர்ந்த சசிகுமார் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்…
கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் திருடிய 2 ஆட்டோக்களையும், சைதாப்பேட்டையில் திருடிய ஒரு ஆட்டோ என 3 ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணயில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் திருடப்படும் ஆட்டோக்களை கொண்டு வாடகைக்கு ஓட்டி பணம் சம்பாதித்துவிட்டு, பழுதடைந்தவுடன் அதை நிறுத்தி விட்டு, வேறு ஆட்டோவை திருடி சம்பாதித்து ஜாலியாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்…